இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் கொழும்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியின் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அசிதா பெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி சார்பாக மேத்யூஸ் (141), தினேஷ் சண்டிமல் (107) ஆகியோரின் சதங்களால் 439 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது.
241 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் இம்ராஹிம் ஜட்ரன் நிதானமாக விளையாடி சதம் அடித்து 114 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் ஒரு கட்டத்தில் 241 ரன்கள் எடுத்த நிலையில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது.
அதன்பின் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழக்க 296 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் 55 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் 56 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரபாத் ஜெயசூர்யா இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/sports/ கிளிக் செய்யவும்.