கோவையில் மருதமலை முருகன் கோவில் உள்ளது. இது முருக பக்தர்களால் ஏழாவது படை வீடு என அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தினந்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மருதமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 14-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடந்தது. கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாளான நேற்று காலை திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடை பெற்றது. காலை 8.30.மணி அளவில் யாகசாலை கலசங்களில் உள்ள தீர்த்தங்களை கொண்டு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
காலை 9 மணிமுதல் 10.30 மணி அளவில் வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது வள்ளி மஞ்சள் பட்டும், தெய்வானை சிவப்பு பட்டும் அணிந்திருந்தனர். சுப்பிரமணிய சுவாமி வெண்பட்டு ஆடை உடுத்தி மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
அதன்பிறகு பக்தர்களின் மொய்ப்பணம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு மொய் வைத்தனர். அந்த வகையில் ஒட்டுமொத்தமாக ரூ.86,200 மொய்ப்பணம் வசூலானது.
தொடர்ந்து பாத காணிக்கை செலுத்துதல் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் தம்பதி சமேதராக பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். மருதமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/city-news/ கிளிக் செய்யவும்.