கோவை மருதமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பக்தர்களால் முருகனின் ஏழாம் படைவீடு என அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் வருடந்தோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா 14-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து காலை, மாலை இரு வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
4-வது நாளான நேற்று, வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன் மண்டபத்தில் ஆடும் மயில் வாகனத்தில் தண்டாயுதபாணி பக்தர்களுக் காட்சியளித்தார்.
இன்று கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இதனையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோ பூஜையுடன் விழா தொடங்குகிறது.
அதனை தொடர்ந்து 16 வகை திரவியங்களால் சுவாமிக்கு அபிேஷகம், மகா தீபாராதனை காட்டப்படுகிறது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது..
அதிகளவில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
மருதமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று(சனிக்கிழமை) மற்றும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்கள் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
எனவே பக்தர்கள் கோவில் சார்பில் இயக்கப்படும் வாகனங்களிலும், மலைப்படிக்கட்டுகள் வழியாகவும் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மருதமலை அடிவாரத்தில் இருந்து 3 வாகனங்கள் மலைக்கோவிலுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இன்று சூரசம்ஹாரம் என்பதால் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் சார்பில் கூடுதல் வாகனங்களை இயக்குவது என முடிவுசெய்யப்பட்டு உள்ளது.
சூரசம்காரத்தை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர டிரோன்கள் மூலம் கோவில் பகுதியில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார், உறுப்பினர்கள் மகேஷ்குமார், பிரேம்குமார், சொக்கம்புதூர் கனகராஜ், சுகன்யா ராஜரத்தினம் மற்றும் கோவில் இணை ஆணையர் ஹர்சினி ஆகியோர் செய்து வருகின்றனர்.
நாளை திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/city-news/ கிளிக் செய்யவும்.