கோவை துடியலூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விஜயதசமி அணிவகுப்பு ஊர்வலம், பொதுக்கூட்டம் நடந்தது. இந்த ஊர்வலத்தை கோவை மாவட்ட தேவர் பேரவை தலைவர் சுந்தரதேவர் காவிக்கொடியை அசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தார். சீருடை அணிந்த 700 பேர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணி வகுப்பு ஊர்வலம் துடியலூர் பஸ்நிலையத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக விஸ்வநாதபுரம் பொருட்காட்சி மைதானத்தை அடைந்தது.
இந்த ஊர்வலத்தைத் தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்துக்கு தமிழ்நாடு குறு, சிறு தொழில் சங்க துணை தலைவர் சுருளிவேல் தலைமை தாங்கினார். வாராகி மணிகண்ட சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். உமாதேவி மருத்துவமனை தலைவர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார்.
ஒவ்வொருவரும் தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்து கட்டுப்பாட்டுடன் வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு அவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளித்து அவர்களை இந்த நாட்டின் சேவையில் ஈடுபட ஆர்.எஸ்.எஸ். ஊக்குவிக்கிறது. இந்த சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஆர்.எஸ்.எஸ். செயல்பட்டு வருகிறது.
நிலநடுக்கம், புயல், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படும்போது உடனடியாக களத்துக்கு சென்று மக்களை மீட்டு அவர்களின் துயர் துடைக்கும் பணியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சாதி, மத, மொழி, இன பாகு பாடின்றி தொண்டாற்றி வருகின்றனர்.
இன்று இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்து நிற்கிறது. ஆர்.எஸ்.எஸ். நல்ல மனிதர்களை உருவாக்கி இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். வரும் காலத்தில் உலகத்தின் குருவாக இந்தியாவை மாற்றும் வேலையை செய்து வருகிறது என கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென்தமிழக இணை அமைப்பாளர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு பேசினார்.
மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/city-news/ கிளிக் செய்யவும்.