கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டது இதுவே முதல்முறை. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் தொடங்கி பணியாளர்கள் வரை பெரும் பொருளாதார பாதிப்புக்குள்ளாகினர்.
இதை அடுத்து இந்த வருடம் பொங்கலுக்கு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டு பெரிய படங்கள் திரைக்கு வருவதால் மக்கள் கூட்டம் திரையரங்கை நோக்கித் திரும்பும் என எதிர்பார்த்த தியேட்டர் உரிமையாளர்கள் 100% இருக்கைகளை நிரப்பிக்கொள்ள அனுமதி கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
நடிகர் விஜய்யும் நேரடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதே கோரிக்கையை வைத்திருந்தார். இதையடுத்து தமிழக அரசு திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளை நிரப்பிக் கொள்ள அனுமதி அளித்திருந்தது. இதனால் திரையரங்கு உரிமையாளர்களும் ஆன்லைன் முன்பதிவு மூலமாக அனைத்து டிக்கெட்டுகளும் விற்று விட்டார்கள். மாஸ்டர் திரைப்படத்துக்கான முன் பதிவும் பெரும்பாலான திரையரங்குகளில் முடிந்துவிட்டது.
தற்போது மத்திய அரசு மற்றும் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால் தமிழக அரசு தன்னுடைய அறிவிப்பை வாபஸ் பெற்று இருக்கக் கூடிய சூழலில் விற்ற டிக்கெட்டுகளை என்ன செய்வதென்று தெரியாமல் திரையரங்க உரிமையாளர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள்.
அனைத்து டிக்கெட்டுகளுக்கான பணத்தையும் திருப்பிக் கொடுத்து விட்டு 50 சதவீத இருக்கைகளுடன் மீண்டும் முன்பதிவை முதலில் இருந்து தொடங்கலாம் என்று அவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள்.